Saturday 26 November 2011

அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு கோவையில் துவக்கம்!



பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் கோவையில் 25.11.2011 அன்று சந்தித்து கூட்டாக “அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒன்றை தொடங்கினர்.

இக்கூட்டமைப்பில் பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி, தமிழர் விடுதலை இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் கழகம், தமிழ் மைந்தர் மன்றம், கோணஙகள் திரைப்படச் சங்கம், கேலிபர் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு), இ.க.க (மா.லெ), கோப்மா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அணு உலை தொடர்பான ஆபத்துகள் பற்றியும் மின்பற்றாக் குறையை எதிர்கொள்வதற்கு திறமையான மின்னாற்றல்-மேலாண்மை மற்றும் மாற்று மின்னாற்றல் உற்பத்தி வாய்ப்புகள் ஆகியவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் தேவை விவாதிக்கப்பட்டது. அதேபோல் உள்நாட்டுத் தேவைகளையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மய்யப்படுத்தியும் நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக்க் கொண்ட வளர்ச்சிப் பாணியை முன்னெடுப்பதற்கான பரப்புரையை மேற்கொள்வதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கு. இராமகிருட்டிணன் (9443822256) மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கோவை பொறுப்பாளர்களில் ஒருவரான பொன். சந்திரன் (9443039630) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டு சக்கர மோட்டார் வாகனப் பேரணி:
இடிந்தகரையில் (இயற்பெயர் விடிந்தகரையா?) போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் கோவையிலிருந்து இரண்டு சக்கர மோட்டார் வாகனப் பேரணி ஒன்று டிசம்பர் 1ம் நாள் புறப்பட்டுச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது. போகும் வழியில் உள்ள பல்வேறு ஊர்களில்  (பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களில்) துண்டறிக்கைகள் விநியோகித்தும், தெருமுனை கூட்டங்கள், குறு நாடகங்கள் நடத்தியும் வழி நெடுகிலும் பரப்புரை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

அணு உலை தொடர்பான பயிலரங்கம்:
மேற்படி பேரணியில் பங்குபெறும் தோழர்களுக்கு அணு உலை ஆபத்து தொடர்பான விரிவான விளக்கங்களையும் மாற்று மின்னாற்றல் பற்றிய தகவல்கள் தருவதற்கான பயிலரங்கம் ஒன்றை 29.11.2011 அன்று நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment