தொழில் அமைப்புகள் கூடங்குளம் அணு உலையை
உடனடியாக திறக்க வேண்டும்
என அறிவித்துள்ளப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்து
அப்போராட்டம் கைவிடப்படவேண்டுமென மன்றாடி
கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணா நிலைப் போராட்டம்
நாள்: 15.12.2011. காலை 9மணி முதல் 5மணி வரை,
காந்திபுரம் தமிழ் நாடு ஹோட்டல் அருகில்
பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோவையிலிருந்து கூடங்குளம்வரை மோட்டார் வாகனப் பரப்புரை செய்து போராடும் மக்களுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பினர் கூடங்குளம் சென்றிருந்த நேரத்தில் கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மின்பற்றாக்குறையைத் தீர்க்க கூடங்குளம் அணு உலையை உடனே திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி அறிவித்துள்ளப் போராட்டச் செய்தியைக் கேட்டு கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அணு உலைகளை நிறுவுவதற்காக கைகொள்ளப்படவேண்டிய தேச, சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் சட்ட மரபுகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளால் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதை கோவை தொழில் அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளார்கள். ஜப்பானின் புக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு பிரச்சினையை சமாளிக்க முதல் வாரத்தில் செலவிடப்பட்ட தொகை தமிழ்நாட்டின் தற்போதைய ஐந்தாண்டுகளுக்கான பட்ஜெட் தொகை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழில் துறை பின்னடைவுகளில் தொழில்துறைகளுக்கான கூடுதல் வரி என்பது உலகளவில் நடந்துள்ள அனைத்து அணு உலை விபத்துகளும் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். மின்சாரம் வேண்டும் என்பதற்காக, அணு சக்தித் துறை அதிகாரிகளின் அசிரத்தை நடவடிக்கைகளால் தவறான இடத்தில் கட்டப்பட்டுவிட்ட இந்த அணு உலைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் சீரிய ஆய்வுகள் இன்று அவசியமாகிறது. அவ்வாய்வுகளின்றி அவற்றை உடனடியாகத் திறக்கச் சொல்வதென்பது எதிர்காலத்தில் நம்மால் அனைத்து விதங்களிலும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக அது மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோவைத் தொழில்துறையினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாய் அழிக்கும் அணு உலையை, பிற மாநிலங்கள் வேண்டாம் என் புறக்கணித்த அணு உலையை அபாயகரமான பகுதியான கூடங்குளத்தில் தொடங்குவது தென் தமிழகத்திற்கே ஆபத்தானதாகும்.
மின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் தற்போதுள்ள மின் உற்பத்தியே தமிழகத்தின் அடிப்படைத் தொழில்/விவசாயத் தேவைகளுக்கு போதுமானது. மேலும், அதிக மின்தேவைகளுக்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறிருக்க, குறிப்பாக கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாக அழிக்ககூடியது அங்கு நிறுவப்படவுள்ள அணு உலையும் அதன் அமைவிடமும் என்பதை விளக்குவதற்கும் இக் காரணத்தினால் கோவைத் தொழில் அமைப்பினர் தம் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்து அப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மன்றாடியும் அப்பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள கோவை வருகின்றனர்.
15.12.2011 அன்று நடக்கவிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமைத் தாங்கி நடத்திவைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரித்து திரளாகப் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கு பெறும் கூடங்குளம் பெண்களும் குழந்தைகளும் அணு உலை ஆபத்து பற்றிய விரிவான விளக்கங்களை தருவார்கள். இதில் பங்கு பெறும் பெண்களில் சிலர் தொழில் நிறுவனத் தலைவர்களைச் நேரடியாகச் சந்தித்து தம் துயரங்களைப் எடுத்துச் சொல்வார்கள்.
இப்போராட்டத்திற்கு பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன் (9443822256); பொன்.சந்திரன். (9443039630)
No comments:
Post a Comment